கோயிலை பாதுகாக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு 3 மாதம் சம்பளம் பாக்கி: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கோயிலை பாதுகாத்து வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
By : Thangavelu
தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கோயிலை பாதுகாத்து வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை பாதுகாப்பதற்காக முன்னாள் ராணுவத்தினர் 64 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் கோயில்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்து வருகின்றனர். கோயில்களில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 64 முன்னாள் ராணுவத்தினருக்கு மூன்று மாத சம்பளம் வழங்கவில்லை என்று சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாங்கள் சொந்த பணத்தில்தான் தினமும் கோயிலுக்கு வந்து செல்கிறோம். இதனால் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறோம்.
சம்பளம் வழங்காமல் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மூன்று மாதகால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். எங்கள் குடும்பத்தினர் கஷ்டத்தில் உள்ளனர். சம்பளத்தை நம்பி அருகாமையில் கடன் வாங்கி அதன் மூலமாக குடும்பத்தை நடத்தி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலரின் பிள்ளைகள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர். நாங்கள் இரவு நேரங்களில் எங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் கோயிலை பாதுகாத்து வருகிறோம். எனவே உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: abp