Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை தங்கமணி மரணத்தில் இப்படியா? விலா எலும்புகள் முறிவு, காயங்கள், உடற்கூறாய்வு முடிவில் பரபரப்பு தகவல்!

திருவண்ணாமலை தங்கமணி மரணத்தில் இப்படியா? விலா எலும்புகள் முறிவு, காயங்கள், உடற்கூறாய்வு முடிவில் பரபரப்பு தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2022 12:41 PM GMT

திருவண்ணாமலை தங்கமணி உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கலால் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியினரை சேர்ந்த தங்கமணி கடந்த 27ம் தேதி திடீரென்று உயிரிழந்தார் என்று போலீசார் அறிவித்தனர். இதனை கேள்விப்பட்ட தங்கமணியின் மனைவி, போலீசார் அடித்து தனது கணவனை கொன்றுவிட்டதாக பரபரப்பான புகாரை முன்வைத்தார். உடனடியாக சம்மந்தப்பட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.

இந்த மரணம் தொடர்பாக சட்டமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதனால் வேறு வழியின்றி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்தார். இதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், இன்ஸ்பெக்டர் நிர்மலா உள்ளிட்ட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இது போதாது என்று தங்கமணியின் மனைவி மற்றும் உறவினர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் பின்னர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் தங்கமணியின் உடலை உறவினர்கள் பெற்று சென்று அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், தங்கமணியின் மரணத்தில் முதற்கட்டமாக உடற்கூறாய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதாவது கைகளில் 4 சிராய்ப்பு காயங்களும், தங்கமணி இறப்பதற்கு 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இடது கையின் சுண்டுவிரல் அருகே 4க்கு 3 என்ற அளவில் சிவந்த காயம் ஏற்பட்டுள்ளது. அது அவர் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்தில் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாக்கு கடித்த நிலையிலும் இருந்துள்ளது.

மேலும், இடது தோள்பட்டையின் கீழ் 3 மற்றும் 4வது விலா எலும்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உடற்கூறாய்வு செய்வதற்கு முன்பாக சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். சில வேதியியல் முடிவுகளும் வெளிவருவதற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் முழு முடிவுகள் வந்த பின்னர் இது கொலையா, அல்லது இயற்கை மரணமாக தெரியவரும்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News