கண் சிமிட்டி முடிப்பதற்குள் அடுத்து இரண்டு புயல்? சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பரபரப்பு ரிப்போர்ட்!
கண் சிமிட்டி முடிப்பதற்குள் அடுத்து இரண்டு புயல்? சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பரபரப்பு ரிப்போர்ட்!
By : Muruganandham M
வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘நிவார்’ புயலுக்கு பின்னர் விரைவில் வங்க விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 29 ஆம் தேதி வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுமென கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெறும் என்றும், அதன் பின்னரே அது புயலாக உருவெடுக்குமா என்பது தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது நவம்பர் 30 ஆம் தேதி தாழ்வு நிலையை தீவிரப்படுத்தும் மற்றும் டிசம்பர் 2 ஆம் தேதி சூறாவளி புயலாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 10 ம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவில் மற்றொரு குறைந்த அழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த 48 மணி நேரத்தில் ‘நிவார்’ சூறாவளியின் தாக்கத்தால் ஒடிசாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது. ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களான கஜபதி, மல்கன்கிரி, கோராபுட் மற்றும் நபரங்பூர் மற்றும் ராய்கர் ஆகிய இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 31 செ.மீட்டரும், புதுச்சேரியில் 30 செ.மீ., விழுப்புரத்தில் 28 செ.மீ. , கூடலூரில் 27 செ.மீட்டரும் , சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 26 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.