சென்னையில் அதிர்ச்சி: விமான நிலையத்தில் பிடிப்பட்ட தீவிரவாதி!
By : Thangavelu
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத்சிங் 26, இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் பல்வேறு தீவிரவாத செயல்களை செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் ஹர்ப்ரீத் சிங் திடீரென்று வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். இதனால் பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஹர்ப்ரீத்சிங்கை தேடப்படுகின்ற மற்றும் தலைமறைவான குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச விமான நிலையங்களிலும் அவரது புகைப்படம் அனுப்பப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஹர்ப்ரீத்சிங் வந்தார். அவரின் ஆவணங்கள் கம்ப்யூட்டர் மூலமாக சோதனை செய்த போது அவர் தேடப்படும் ஒரு குற்றவாளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கையும், களவுமாக பிடித்து விமான நிலையத்தில் அடைத்து வைத்தனர்.
மேலும், பஞ்சாப் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி பஞ்சாப் போலீசார் சென்னை வந்து ஹர்ப்ரீத்சிங்கை கைது செய்து பஞ்சாப்பிற்கு அழைத்து சென்றனர். கடந்த 3 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்த நிலையில், மீண்டும் இந்தியா திரும்பும்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Asianetnews