தூத்துக்குடியில் மக்களின் இயல்பு வாழ்வை புரட்டிப்போட்ட மழை.!
தூத்துக்குடியில் மக்களின் இயல்பு வாழ்வை புரட்டிப்போட்ட மழை.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக பருவமழை பெய்து வருகிறது. இதில் கடலோர மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தரைப்பாலங்கள் மூழ்கியும், காற்றினால் மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளன. மேலும் ராமநாதபுரத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. வேலாயுதபுரம் பகுதியில் பனைமரம் சாய்ந்து 5 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதே போன்று வீர காஞ்சிபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்தது. வேடநத்தம் அருகே பாலத்தின் சர்வீஸ் சாலை அடித்து செல்லப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் சகதியில் சிக்கி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
வாலசமுத்திரம், வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் ஓடுவதால் வெங்கடாசலபுரம் பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பொதிகுளத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிய சேதமடைந்த நிலையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் அதனை ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் பெருகி வருகிறது. வைகை ஆற்றில் பாயும் வெள்ளப்பெருக்கால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 10,886 கனஅடி வீதம் நீர் வருகிறது.