பல்புக்கே ஒரு கோடி ரூபாய்: தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தெருவிளக்கு மோசடி!
By : Thangavelu
தேனி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டிபல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகளில் ஒளிருவதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரின் வீடுகளை அலங்கரித்துள்ளது.
2019, 2020ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவனாப்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.
அதன்படி 36 வாட்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒரு எல்.இ.டி. பல்பு ரூ.9,987 வாங்குவதற்கு அந்தந்த பேரூராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் வழங்கியது. அதன்படி 10 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 1,300 பல்புலகள், ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் தேனி லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆய்வில் கொள்முதல் செய்யப்பட்ட எல்.இ.டி. பல்பு ஒன்றின் குறைந்த பட்ச விலை ரூ.1200 முதல் அதிகபட்சமாக 2500 ரூபாய் வரை மட்டுமே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக ஒரு பல்புக்கு 7,487 ரூபாய்க்கு கணக்கு காட்டி கொள்முதல் செய்ததில் மொத்தம் 97 லட்சத்து 33 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட பேரூராட்சியின் முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிப்பட்டி பாலசுப்பிரமணியன், தென்கரை மகேஸ்வரன் உள்ளிட்ட 11 பேரும், க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய ஒப்பந்ததாரர்கள் என்று மொத்தம் 13 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 10ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெருவிளக்கு வாங்குவதில் கோடிக்கணக்கில் கணக்கு காட்டு ஊழல் செய்வது தேனி மாவட்ட நிர்வாகத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
Source,Image Courtesy News 18 Tamilnadu