"மாஸ்க் ஏன் போடல, உங்களுக்கு வெட்கமாக இல்லையா! " பொதுமக்களை அவமதித்த தேனி கலெக்டர்!
தேனி மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்தில் திடீரென்று ஏறிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
தேனி மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்தில் திடீரென்று ஏறிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கின்ற வகையில் பொது இடங்களுக்கு செல்கின்ற அனைத்து மக்களும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி அனைவரும் முககவசம் அணிந்து வந்த நிலையில் தொற்று குறைந்து வருகின்ற காரணத்தினால் பல்வேறு இடங்களில் முககவசம் அணிவது குறையத் தொடங்கியது.
இதனிடையே மீண்டும் உலகை அச்சுறுத்த உருமாறிய நிலையில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் தடுப்பூசி போடும் பணியானது வேகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்வதற்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், நேற்று (டிசம்பர் 5) ஆண்டிப்பட்டி அருகே ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை நிறுத்த சொல்லி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முககவசம் அணியாமல் இருந்தததை பார்த்து அவர்களை எச்சரித்தார்.
இதன் பின்னர் பேருந்து உள்ளே சென்று ஆய்வு செய்த ஆட்சியர், பயணிகள் பாதி பேர் முகவசம் அணியாமல் இருந்தனர். அவர்களிடம் "ஏன் முககவசம் போடவில்லை. உங்களுக்கு அறிவில்லையா, வெட்கமாக இல்லையா" என்ற கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். மேலும், தாசில்தாரிடம் முககவசம் அணியாத பயணிகளுக்கு பயன் போடுங்கள் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அது மட்டுமின்றி அனைவரின் முகவரியையும் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் முககவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக வழங்கி அணிய வைக்கலாம். அதனை விட்டு ஏன் முககவசம் அணியவில்லை என்று அவர்களிடம் கோப்படுவது சரியில்லை என்ற வார்த்தைகள் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Behindwoods