புளியில் பல்லி இறந்திருப்பதாக கூறியவர் மீது தி.மு.க. வழக்கு: அதிர்ச்சியில் முதியவர் மகன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை?
By : Thangavelu
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இறந்து கிடப்பதாக திருத்தணியை சேர்ந்த முதியவர் ஒருவர் கூறியிருந்தார். அவர் மீது திமுக அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதனால் முதியவரின் மகன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டகக் கடை எண் 2ல், நேற்று திமுக அரசு பொங்கல் தொகுப்பை வழங்கியது. அதனை ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கி சென்றனர். அதே போன்று தோட்டக்கார மடம் பகுதியை சேர்ந்த நந்தன் 65 வயதுடைய முதியவரும் வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது புளியில் பல்லி இறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையில் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வரஇயலாத வழக்கினை, திருத்தணி காவல்துறையினர் (1/5)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 11, 2022
இந்த பரிசு தொகுப்பை மீண்டும் ரேஷன் கடைக்காரரிடம் வந்து காண்பித்துள்ளார். அப்போது அந்த கடை ஊழியர் முதியவருக்கு சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. மிகவும் அலட்சியப்படுத்தியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இச்செய்திகள் அனைத்து ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது. இதனிடையே திமுக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்திவிட்டதாக முதியவர் நந்தன் மீது, நியாய விலைக்கடை ஊழியர் சரவணன் புகார் அளித்துள்ளார். இதனால் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தார் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், முதியவர் நந்தனின் மகன் குப்புசாமி 36, பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். உண்மையை சொன்ன முதியவர் மீது வழக்குப் போட்டுள்ள திமுக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai