திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது.
By : Thangavelu
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் மகா தீபம் கடந்த 19ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் தங்களின் வீடுகளில் இருந்தே தரிசனம் செய்தனர்.
இதனிடையே தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோயிலில் இருந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரி மற்றும் நெய் உச்சி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் ஏற்றப்படுகிறது. தீபத்தின்போது வரமுடியாத பக்தர்கள் அதற்கு அடுத்த நாள் நேரில் வந்து பார்த்து தீபதரிசனம் செய்து வந்தனர்.
அதன்படி நேற்று 10வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலை சுற்றியுள்ள பக்தர்கள் தீபதரிசனம் செய்து வணங்கினர். இதனிடையே மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11வது நாளான இன்று (நவம்பர் 29) இரவுடன் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை மலை உச்சியில் இருந்து தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் இன்றும், நாளையும் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi