சி.சி.டி.வி கேமரா பொருத்த வந்தவர் கையில் லேப்டாப்: பதறிக் கொண்டு அதிகாரிகளிடம் முற்றுகையிட்ட தி.மு.க.வினர்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் எண்ணப்படுகின்றன.
By : Thangavelu
திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வந்தவர் கையில் லேப்டாப் இருந்ததால் அலறியடித்துக்கொண்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக முகவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவை சேர்ந்த முகவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒரு கண்டெய்னர் லாரி சென்றால்கூட சந்தேகத்துடன் திமுகவினர் மடக்கி பிடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதே நிலைதான். வாக்கு எண்ணும் மையங்களில் எதிரே குடியிருக்கும் வீடுகளில் உள்ள டிஸ் ஆண்டனாவை கூட அகற்ற சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், அதே போன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்குப் பதிவு மையங்களில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு, துணை ராணுவப்படை மற்றும் தமிழ்நாடு போலீசார் உட்பட 3 அடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், திருச்சி மேற்கு தொகுதி மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' அருகே லேப் டாப் உடன் ஒரு இளைஞர் நடமாடி உள்ளார்.
அவரை பிடித்துக்கொண்ட திமுக முகவர்கள், எதற்காக லேப்டாப்புடன் இங்கே வந்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் பின்னர் அங்கிருக்கும் அதிகாரிகளிடம் திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். இதன் பின்னர் அதிகாரிகள் கூறும்போது, சிசிடிவி கேமரா பொருத்த வந்தவர்தான் அந்த இளைஞர் என்று கூறினார்.
திமுகவினர் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருவர் கையில் லேப்டாப் வைத்திருந்தாலே வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து விடுவாரா என்ற கண்ணோட்டத்தில் திமுகவினர் பார்த்து வருகின்றனர்.