அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் பேச்சு!
அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
By : Bharathi Latha
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், தமிழில் வணக்கத்தை கூறி தனது உரையை தொடங்கினார். இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் வாரணாசியில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்களை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மற்ற உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் விதமாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. நமது கலாச்சாரம் நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் மட்டுமில்லாமல் 'வசுதைவ குடும்பகம்' என்கிற அடிப்படையில் உலகத்திற்கு பயனளிக்கக்கூடியது என்று அவர் கூறினார்.
இங்கு பட்டம் பெற்ற மாணவிகள் காலனியாதிக்க கலாச்சாரங்களை கைவிட்டு நமது பாரம்பரிய கலாச்சாரங்களை தொடர வேண்டும்' என மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ். பி. தியாகராஜன், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர், பதிவாளர், கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: PIB