Kathir News
Begin typing your search above and press return to search.

மரத்தடியில் வகுப்பறை! மழை வந்தால் ஒதுங்க கூட இடம் இல்லாத முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் அவலம்

மரத்தடியில் வகுப்பறை! மழை வந்தால் ஒதுங்க கூட இடம் இல்லாத முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் அவலம்

ThangaveluBy : Thangavelu

  |  13 July 2022 7:32 AM GMT

திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வரும் அவல நிலை தொடர்ந்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரையில் மொத்தம் 430 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பவித்திர மாணிக்கத்தை சுற்றியுள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

மொத்தம் 7 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளது. ஒரு வகுப்பறையில் 40 பேர் மட்டுமே அமர முடியும் நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவர்களை அடைத்து வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. மழை காலங்களில் அருகாமையில் இருக்கும் காளியம்மன் கோயிலில் மாணவர்கள் அமர வைக்கப்படுகிறது. குறைந்தளவு மழை பெய்யும் சமயத்தில் பள்ளி வராண்டாவில் மாணவ, மாணவிகள் அமர வைக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

மேலும், பள்ளியில் சத்துணவு கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வைப்பதற்காக கட்டப்பட்ட சிலாப் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மேற்கூரையில் மழைநீர் கசியத்தொடங்கும். இதனால் சமையல் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும், மாணவர்கள் சாப்பிடுவதற்கு இடம் இன்றி மண் தரையில் அமர்ந்து சாப்பிடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக சத்துணவு கூடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசுப்பள்ளியை விட்டு விலகி தனியார் பள்ளியில் சேர்ந்து படிப்பதால் பல பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்த பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News