மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 30-லிருந்து 600-ஆக மாறியது நீட் தேர்வால் தான் - வானதி சீனிவாசன்!
By : Kathir Webdesk
ஆளுநரின் முடிவை ஏற்று, நீட் தேர்வு பயிற்சி மையங்களை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும். பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்த விலக்கு அளிப்பதற்கான, தமிழக அரசின் சட்டத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், நீட் விலக்கு சட்டம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதையுயும் ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆளுநரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
நீட் தேர்வு என்பதே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அரசியல்வாதிகள், பெரு முதலாளிகளால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளின் நன்கொடை மற்றும் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டவும், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் நீட் தேர்வு அவசியமாகும். அதனால்தான், அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வருகிறது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களும், ஏழைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்குமாறு, இன்றைய பாஜக தேசியத் தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதனாலும், மத்திய பாஜக அரசு, ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11மருத்துவக் கல்லூரிகளை அளித்ததாலும், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 20, 30-லிருந்து 500, 600 என மாறியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் நடைமுறையில் 69 சதவீத இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடும் இருக்கிறது. எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லை . நீட் தேர்வால் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருப்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் பள்ளிகளும்தான்.
எனவேதான், சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டபோதே, அதனை பாஜக சார்பில் எதிர்த்தோம். தேவையில்லை என்று வாதிட்டோம். இது தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் வலியுறுத்தினோம். எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பக்கம் நிற்காமல் ஆளுநரின் முடிவை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
நீட் தேர்வில் அதிகமான தமிழக மாணவர்கள், தமிழ் வழி மாணவர்கள், கிராமப்புற, ஏழை மாணவர்கள் வெற்றிபெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.