பிரதமரின் காணொளி பேச்சை முழுமையாக கேட்கவிடாமல் செய்த எம்.பி கதிர் ஆனந்த்! ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற விவசாயிகள்!

By : Kathir Webdesk
வேலூரில் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு காணொளி மூலம் நேரடியாக விவசாயிகளிடம் கலந்துரையாடலும் மற்றும் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளி மூலம் பேசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில், விவசாயிகள் பிரதமர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கூட்டரங்கில் அமர்ந்திருந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், பிரதமரின் காணொளி பேச்சை முழுமையாக சத்தமில்லாமல் மியூட் செய்துவிட்டு, ஹிந்தி நமக்கு புரியாது, அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும். நம் வேலையை நாம் பார்ப்போம் என கூறி பிற்பகல் ஒரு மணி வரையில் பிரதமர் பேசுவதை யாரும் கேட்காமல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும், பயனாளிகளும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பிரதமர் பேசிக்கொண்டிருந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 36 லட்சம் விவசாயிகள், 11வது தவணையாக ₹2,000 பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
