மனைவியிடம் வாட்ஸ்அப்பில் கதறல்.. துப்பாக்கி முனையில் ரவுடியை பிடித்த வேலூர் போலீஸ்.!
மனைவியிடம் வாட்ஸ்அப்பில் கதறல்.. துப்பாக்கி முனையில் ரவுடியை பிடித்த வேலூர் போலீஸ்.!
By : Kathir Webdesk
ஜாமீனில் வந்து 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த வேலூரை சேர்ந்த ரவுடி ஜானியை துப்பாக்கி முனையில் வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வன்டறதாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் வேலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் சில நாட்களிலேயே தலைமறைவானார். தலைமறைவாக உள்ள ஜானியை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு வகையில் முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜானி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் அவரது பெயர் என்கவுண்ட்டர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் உத்தரவின் பெரயில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் ரவுடி ஜானி பெங்களூரில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த ஜானியை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். உடனே அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து வேலூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதற்கு முன்னர் ரவுடி ஜானி கைது செய்யப்படும்போது காட்பாடியில் உள்ள தனது மனைவியிடம் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் தன்னை காப்பாற்றும்படியும் கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.