விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை: நரிக்குறவர்களுக்கு வழங்கிய கோட்டாச்சியர்.!
விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை: நரிக்குறவர்களுக்கு வழங்கிய கோட்டாச்சியர்.!
By : Kathir Webdesk
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று மீண்டும் அவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாச்சியர் ப்ரீத்தி பார்கவி வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் பகுதியில் நரிக்குறவர் மற்றும் இருளர் காலனி உள்ளது. இந்த காலனிகளில் 18 வயது கடந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது 18 வயதை அடைந்தோர் மற்றும் இதுவரையில் வாக்களிக்காதோர்களின் 50 பேர்களின் பெயர் பட்டியலை சேகரித்தார். இதனிடையே அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பெற்றார். இதனை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். ஒரு வாரத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு உடனடியாக வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிட்டு தயாராகியது.
இந்நிலையில் அதிகத்தூரில் உள்ள நரிக்குறவர்களுக்கு நேரில் சென்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரித்தி பார்கவி வழங்கினார். மொத்தம் 50 பேருக்கு வழங்கினார். வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொண்டவர்கள் கோட்டாச்சியருக்கு நன்றி தெரிவித்தனர். கட்டாயம் தேர்தல் வரும்போது வாக்களிப்போம் என கோட்டாச்சியரிடம் தெரிவித்தனர். உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொடுத்த அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.