வாக்கு எண்ணிக்கைக்கு செல்லவிருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) எண்ணப்படுகிறது.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) எண்ணப்படுகிறது.
தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே போன்று தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் 2062 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 56 பேருக்கு பாஸிடிவ் என்று முடிவுகள் வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முகாமில் 20 பேருக்கும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டத்தில் 6 பேருக்கும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டதில் 12 பேருக்கும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் எடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கும், ஆலந்தூர் தொகுதியில் எடுக்கப்பட்டதில் 10 பேருக்கும் என 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.