Kathir News
Begin typing your search above and press return to search.

கருவறையை இடித்த அறநிலையத் துறை..சுவரேறிக் குதித்து தடுக்க முயன்ற பக்தர்கள்..தீர்வு தான் என்ன.?

கருவறையை இடித்த அறநிலையத் துறை..சுவரேறிக் குதித்து தடுக்க முயன்ற பக்தர்கள்..தீர்வு தான் என்ன.?

கருவறையை இடித்த அறநிலையத் துறை..சுவரேறிக் குதித்து தடுக்க முயன்ற பக்தர்கள்..தீர்வு தான் என்ன.?

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  11 Dec 2020 6:30 AM GMT

கோவில்களை தனியார் நிர்வாகம் செய்யும் முறை சரியில்லை, நிதியில் முறைகேடு நடக்கிறது, ஆகம விதிகள் பின்பற்றப்படுவது இல்லை, என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தித் தான் தமிழகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கோவில் நிர்வாகங்களை அரசு கையில் எடுக்கிறது. ஆனால் அதற்கென்று சட்டம் கொண்டு வந்து விதிகள் வகுக்கும் அரசே அவற்றைப் பின்பற்றுவதில்லை.

மற்ற அரசுத் துறைகளைப் போன்றே அறநிலையத் துறையிலும் நடக்கும் ஊழல்கள் நாளுக்கு ஒன்று என்ற அளவிலாவது வெளிவந்து கொண்டு தான் உள்ளன. இவற்றில் வெளிவராமல் போவது எத்தனை என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் வெளிவந்த அறநிலைத்துறை அட்டகாசங்களில் மிக முக்கியமான ஒன்று சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம்.

இது நடந்தது கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று நள்ளிரவு நேரம். அப்படியானால் இப்போது இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சில நாட்களுக்கு முன் கோவில் நிலங்களை மதம் தொடர்பான காரியங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அறநிலையத் துறையின் வரலாறு அப்படி.

இந்த தீர்ப்புக்கு காரணம் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில். இந்தக் கோவிலின் கருவறையை பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரவில் இடித்த‌ அறநிலையத் துறை, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையும் முறைகேடாக பயன்படுத்த அனுமதித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பிரகாரம் தாக்குப் பிடிக்காது என்று கூறி பக்தர்களின் எதிர்ப்பை மீறி அறநிலையத்துறை முதலில் வெளிப் பிரகாரத்தை இடித்தது. இது நடந்தது 2013-14ஆம் ஆண்டு கால கட்டத்தில். புனரமைப்பதாகக் கூறிவிட்டு கோவிலை இடிப்பதை பக்தர்கள் ஏற்கனவே எதிர்த்து வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு கோவிலின் உள் பிரகாரத்தையும் அறநிலையத் துறை இடிக்க முயன்றது.

அப்போது உஷாரான பக்தர்கள் நீதிமன்றத்தில் கோவிலை இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்‌. நீதிமன்றம் உள் பிரகாரத்தை இடிக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. எனினும் உள் பிரகாரத்தை புனரமைக்க ₹94.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்துள்ளனர்.

இதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்திய போதும் "பக்தர்களின் பாதுகாப்புக்காகவே உள் பிரகாரம் இடிக்கப்படுகிறது" என்று கூறி அறநிலையத்துறை அதையும் இடித்து விட்டது. சரி இது வரை தான் தோற்று விட்டோம் இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் பல முறை கருவறையை இடிக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு நடந்த ஒரு போராட்டத்தின் போது இரு பெண்கள் அருள் வந்து சாமியாடி உள்ளனர்.

"ஆண்டாண்டு காலமாக இங்கு குடியிருந்து வருகிறேன். எனவே கருவறையில் இடிக்கக் கூடாது சிலையை மாற்றக்கூடாது. மீறி இடித்தால் அதற்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும். பணமும் செல்வாக்கும் என்னிடம் பலிக்காது" என்று அருள்வாக்கு கூறியுள்ளனர். மேலும் சில பக்தர்கள் அறநிலையத் துறை கருவறையை இடிக்க முயன்றால் தீக்குளிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிலின் கருவறை எப்பேர்ப்பட்டவர்களும் குனிந்து நின்று மட்டுமே அம்மனை தரிசிக்கும் அளவு சிறியது என்பது இந்தக் கோவிலின் சிறப்பு. இவ்வாறு இருக்கையில் பக்தர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால், இரவு நேரத்தில் கோவிலின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடிவிட்டு கருவறையை இடிக்கும் பாதகச் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய கோவில் கட்ட பாலாலயம் செய்து விட்டதாகக் கூறி நள்ளிரவில் கோவில் கருவறையை இடிக்க அறநிலையத் துறை ஏற்பாடு செய்தது. கட்டுமானத் தொழிலாளர்களையும் காவல் துறையினரையும் கோவில் வளாகத்தில் குவித்து பக்தர்களின் போராட்டத்தை ஒடுக்கி ஜே.சி.பி இயந்திரத்தை வைத்து கருவறையை இடித்தது.

அறநிலையத் துறையில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தி வரும் செயற்பாட்டாளர் ரங்கராஜன் நரசிம்மன் தனது முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வின் வீடியோவை பதிவிட்டுள்ளார். தன் கண் முன் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் கருவறை இடிக்கப்பட்டதையும் மூலவர் சிலை பாக்கும் பையில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டதையும் பற்றி அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்கச் செய்பவை. கருவறையை இடித்த போது அறநிலையத் துறை அதிகாரிகள் செவி சாய்க்காததால் பக்தர்கள் சுவரேறிக் குதித்து இந்த கொடுமையை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அதிகார வர்க்கம் இறுதியில் ஜெயித்தது மட்டுமல்லாமல் முன்னர் கோவில் இருந்த இடத்தில் தற்போது கழிவறையைக் கட்டியுள்ளது.

புதிதாகக் கட்டப்பட்ட கோவிலிலும் முறைகேடுகள் நடப்பதாக தெரிய வந்ததை அடுத்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், வல்லுநர்கள் குழு அமைத்து கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கோவில் கருவறை இடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்டன.

ஒரு கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட பணிகளுக்கு தற்போது பல கோடிகள் ஆகும் என்று கூறப்படுகிறது. பணிகள் முடிவடையாததால் விழாக் காலங்களில் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு செல்கின்றனர். தற்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தை வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட அறநிலையத் துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு தடை விதித்து தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் உண்மையிலேயே புனரமைக்கத் தான் பழைமை வாய்ந்த கோவில் இடிக்கப்பட்டதா அல்லது புதிய கோவில் கட்டும் நிதியில் கையாடல் செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் தீட்டிய திட்டமா என்ற சந்தேகம் தான் எழுகிறது. இடித்த கோவில் இடித்தது தான் என்றாலும் இந்த மாபாதகத்துக்குக் காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Sources:

https://m.facebook.com/story.php?story_fbid=706562636655099&id=2489874681042342&anchor_composer=false

https://www.google.com/amp/s/www.maalaimalar.com/amp/news/district/2016/08/28191859/1035318/salem-kottai-mariamman-demonstration-woman-Devotee.vpf

http://www.maalaimalar.com/amp/news/district/2017/11/30161921/1131905/Salem-kottai-mariyamman-temple-demolition.vpf

https://m.dinamalar.com/detail.php?id=1538907

https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/11/30025057/Devotees-argue-with-action-workers-to-demolish-the.vpf

https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/14094513/1065061/Salem-Temple.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News