திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோவில் - தீபம் ஏற்றச் சென்றவர்களைக் கைது செய்தது ஏன்.?
திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோவில் - தீபம் ஏற்றச் சென்றவர்களைக் கைது செய்தது ஏன்.?

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திண்டுக்கல் கோட்டையில் கிரிவலம் சென்ற இந்துக்களை காவல்துறை கைது செய்தது என்ற செய்தி பல செய்தி ஊடகங்களில் நேற்று வெளியானது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி ஊர்வலம் சென்றதால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு இருப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்பார். ஆனால் இது ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு நிகழ்வு.
திண்டுக்கல்லின் முக்கிய அடையாளமாக அமைந்திருக்கும் பத்மகிரி மலைக்கோட்டை 1605ஆம் ஆண்டு மதுரை நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
கோட்டை கட்டப்பட்டு வதற்கு முன்பே மலை உச்சியில் அபிராமி அம்பாள் கோவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காளஹஸ்தி ஈஸ்வரன் மீது பக்தி கொண்ட அச்சுதப்ப நாயக்கர் மலைக்குச் கீழே ஒரு மண்டபம் எழுப்பி அங்கு காளஹஸ்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
திருவிழாக் காலங்களில் அபிராமி அம்பாள் சமேத பத்மகிரீஸ்வரர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 1700களில் நடந்த இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது சுவாமி மூர்த்தங்களைக் காப்பாற்ற மலைக் கோவிலில் இருந்து எடுத்து வந்து கீழே மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் ஹைதர் அலி, ஆங்கிலேயப் படை, திப்பு சுல்தான் என பலரும் மலை மேல் இருந்த கோட்டையை ஆயுத தளமாகவும், ராணுவ நிலையாகவும், சில சமயங்களில் சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இருந்தே கோவிலில் பூஜைகள் கைவிடப்பட்டு கோட்டையாக மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது. கீழே இருந்த காளஹஸ்தீஸ்வரர் மண்டபம் நாளடைவில் கோவிலாக விஸ்தரிக்கப்பட்டு அபிராமி அம்பாள் கோவில் என்றே பெயர் பெற்று விட்டது. இன்றும் இரு மூலவர்கள் இருக்கும் அதிசயக் கோவிலாகத் திகழ்கிறது.
சுதந்திரத்துக்கு பின்னர் கோவிலும் கோட்டையும் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அப்போதிருந்தே கோவிலில் மீண்டும் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆகம விதிப்படி பூஜைகள், சடங்குகள், உற்சவங்கள் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்து அமைப்புகள் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு நிறுவனத்திடம் கோவிலில் வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வழக்கம் போல் தடையை மீறி பத்மகிரி மலையைச் சுற்றி கிரிவலம் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்றவர்களைத் தான் காவல் துறை கைது செய்திருக்கிறது. ஏற்கனவே கோவில் இருக்கும் இடத்தில் வழிபாடு நடத்த என்ன தடை? பிற மதத்தாரின் உணர்வுகள் புண்படும், மத ரீதியான பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை சாக்குப்போக்கு சொல்வதாகத் தெரிகிறது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு சொந்தமான கோவிலில் வழிபாடு நடத்தக் கூட உரிமை அற்றவர்களாகத் தான் இருக்கிறார்கள் இந்துக்கள்.