Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினிகாந்த் வருகையால் திராவிடக் கட்சிகளுக்கு நடுக்கமா ? ஆதரவாளர்கள் அடித்துப் பேசும் விஷயங்கள் !

ரஜினிகாந்த் வருகையால் திராவிடக் கட்சிகளுக்கு நடுக்கமா ? ஆதரவாளர்கள் அடித்துப் பேசும் விஷயங்கள் !

ரஜினிகாந்த் வருகையால் திராவிடக் கட்சிகளுக்கு நடுக்கமா ? ஆதரவாளர்கள் அடித்துப் பேசும் விஷயங்கள் !
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  11 Dec 2020 9:24 AM GMT

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற இரண்டு முக்கிய தலைவர்கள் மறைந்த பின்னர் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கூறினார். இதனால், ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் அமைப்பை பலப்படுத்தும் வேளையில் இறங்கினர்.

ரஜினி தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் அதில் எல்லோரும் சமம் என்றும் கூறினார். திராவிட அரசியல், தேசியவாத அரசியல், இந்துத்துவ அரசியல் என்று பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஆன்மீக அரசியல் என்பது புதியதாகத்தான் இருந்தது. இதனால் அவர் மீதான ஈர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு மேலும் கூடியது. இடையில் அடிக்கடி தம் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி பலமுறை கலந்தாலோசனை செய்தாலும் மீண்டும் தனது இறுதி முடிவை சென்ற டிசம்பர் மாதம் 3- ந்தேதிதான் அறிவித்தார்.

அப்போது ஜனவரியில் துவங்க உள்ள கட்சி குறித்து டிசம்பர் 31ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்படும் கூறிய அவர், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல எனக்கூறி தனது வருகையை உறுதி செய்தார்.

உண்மையில் இது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. முன்பு அவர் வருவாரா ..வரமாட்டாரா என பட்டி மன்றம், விவாதம் நடத்தியவர்கள் இப்போது அவரது வருகையால் ஏற்படப் போகும் மாற்றங்கள், எந்த கட்சிக்கு அவரது வருகையால் பாதிப்பு ஏற்படும், அவருடன் யார்..யார் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து எல்லா ஊடகங்களிலும் விவாதம் வைத்து வருகிறார்கள்.

அவரின் வருகை, தமிழ்நாட்டு அரசியலையே மாற்றப்போகிறது’ என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்கின்றனவோ, இல்லையோ ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுக்கு கணிசமான பாதிப்புகளை அவரது வருகை ஏற்படுத்தத் தவறாது' என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

குறிப்பாக ரஜினியின் நண்பரும், துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி ரஜினி தனிக்கட்சி தொடங்குவதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றி பல்வேறு பத்திரிக்கைகளில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் ரஜினி வருகையால் தமிழக அரசியலில் அடித்தள மாற்றம் ஏற்படும் என்றும், எம்.ஜி.ஆர். போல ரஜினியும் அரசியலில் சாதிப்பார் என்றும் கூறி உள்ளார்.

மேலும் ரஜினி, எம்.ஜி.ஆர். போன்று நல்லவர். ஆன்மிகவாதி, தவறு செய்யமாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ரஜினி போன்று வெளிப்படையான அரசியல்வாதி இப்போது யாரும் இல்லை. எனவே நிச்சயமாக ரஜினிக்கு நடுநிலை மக்கள் மற்றும் புதிய தலைமுறையினர் ஆதரவு கிடைக்கும் என்கிறார்.

மேலும் ரஜினிகாந்த் ஒரு கருத்து கணிப்பு மேற்கொண்டதாகவும், அதன்மூலம் அவருக்கு 14 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறிய குருமூர்த்தி தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிராக இருக்கும் வாக்குகளை அவர் பிரித்து விட்டாலே போதும் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார். இதில் சந்தேகமே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க தி.மு.க வாக்கு வங்கியிலும், அதிமுக வாக்கு வங்கியிலும் ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். இதனால் இரு கட்சிக்கும் வாக்கு வங்கியில் சிறிது பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இந்த வாக்குகளுடன் இரு கட்சிகளுக்கும் எதிரான வாக்குகள் இவரை நோக்கி திரும்ப வாய்ப்புண்டு, இதுவும் மேற்கண்ட பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் ரஜினிகாந்த் கட்சியைக் காரணம் சொல்லியே, திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய தொகுதிப் பேரத்தை பெருக்கவும் வாய்ப்புகள் அதிகம். 'அதிக தொகுதிகள் கொடுக்கிறீர்களா அல்லது நாங்கள் ரஜினியோடு கூட்டணி சேரலாமா ?' என இரண்டு கட்சிகளையும் மற்ற கூட்டணி கட்சிகள் மிரட்டவும் வாய்ப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பட்டியலின மக்களிடம் எப்போதும் ரஜினிகாந்துக்கு என்று ஒரு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த செல்வாக்கு தேர்தல் நேரத்தில் வாக்குகளாக மாறினால் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் சரிவு உண்டாகலாம் என கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் புதிய கட்சி வருகையால் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் சீமான், நடிகர் கமலஹாசன் ஆகியோரின் கட்சியையும் கண்டிப்பாக பாதிக்கும் எனக் கூறுகிறார்கள்.

ஏன் எனில் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டார் வால்யூ உள்ளவராக இருப்பதால் மற்ற நடிகர்களின் கட்சி பாதிக்கபப்டும் என அவரது ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர். மேலும் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர நண்பர் என்ற அடிப்படையிலும் கமல் தொடர் முயற்சிகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜ.க-வின் பி டீம்தான் ரஜினிகாந்த் என எதிர்தரப்பினர் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். ஆனால் மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் ரஜினிகாந்த் இதுவரை பாஜகவுக்கும் பிடி கொடுக்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டும் .

இந்நிலையில் தனது காலத்தின் பெரும்பகுதியை சினிமாவில் செலவழித்து விட்டு, அங்கிருந்தே தமிழக அரசியல் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு, வயது மற்றும் அரசியல் முதிர்ச்சியுடன் அரசியல் களத்துக்கு வரும் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கிய பின் எடுக்கவுள்ள முக்கிய முடிவு, நிச்சயம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

குறிப்பாக ரஜினிகாந்த வரும் தேர்தலில் திருவண்ணமலையில் போட்டியிடுவார் என்ற தகவலை அவருடைய அண்ணன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த தொகுதி திமுகவின் வலிமையான இடம் என கருதப்படுகிறது. அதே சமயம் ஆதரவாளர்கள் ஒரு பக்கம், ஆன்மீக வாதிகள் ஒரு பக்கம் என இருக்கும் அந்த இடம் ரஜினி வருகையால் திராவிட கட்சிகளுக்கு எத்தைகைய மிரட்டலை தரும் என பாருங்கள், இது போலத்தான் தமிழகத்தின் ஏராளமான தொகுதிகளின் நிலவரங்களும்.. என அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News