"மாநாடு" சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பு - ஓட்டுக்காக தியேட்டர் வாசலில் கதியாக கிடந்த காங்கிரஸ் கட்சியினர்!
இளைஞர் காங்கிரஸ் பதவிகளை பெற அக்கட்சியினர்,இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
By : Muruganandham
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறநிலையில், இளைஞர் காங்கிரஸ் பதவிகளை பெற, இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் திரையரங்கில் மாநாடு திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கி இளைஞர்களையும், மாணவர்களையும் இளைஞர் காங்கிரஸில் தேர்தலில் வாக்களிக்க வைக்க பேரம் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து இதன் பின்னணி குறித்து ஆராய்ந்து பார்த்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.
இளைஞர் காங்கிரசில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக IYC என்ற செயலி மூலம் கடந்த நவம்பர் 7 ம் தேதி முதல் டிசம்பர் 7 ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமாம்.
தேர்தல் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் , கடைசி முயற்சியாக நூதன மோசடியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நிறைவடைய சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன. இதற்காக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் முகாமிட்டு, "மாநாடு" படம் பார்க்க வரும் இளைஞர்களிடம் இலவசமாக டிக்கெட் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதற்கு உங்களுடைய ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மட்டும் கொண்டு வந்தால் போதும் என தெரிவிக்கின்றனர். அவற்றை கொண்டு வரும் இளைஞர்களை, அந்த ஆவணங்களை பயன்படுத்தி கட்சி உறுப்பினராக மாற்றுகின்றனர்.
உறுப்பினராவதற்கு கட்டணமாக 50 ரூபாயினையும் கட்சியினரே செலுத்திக்கொள்கின்றனர். உறுப்பினர்களை இணைத்த கையோடு தேர்தலுக்கு வாக்களிக்கும் மோசடியும் அரங்கேறிவிடுகிறது. பின்னர் கட்சியின் அடையாள அட்டை கொண்டு வந்த இளைஞர்களுக்கு "மாநாடு" டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை ஒருவர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது.