கொரோனா பாதித்த மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் நடிகர்! இறுதி சடங்கும் செய்து நெகிழ வைத்த மனிதநேயம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரபல நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டி வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல கன்னட நடிகரான அர்ஜுன் கவுடா, கொரோனா நோயாளிகளுக்கு உதவுதற்காக, ஆம்புலன்ஸ் ஓட்டுனராக மாறியிருக்கிறார். கன்னடத்தில் யுவரத்னா, ரஸ்டம், ஒடியா, ஆ துருஷ்யா உட்பட சில படங்களில் அர்ஜுன் கவுடா நடித்துள்ளார்.
"புரொஜக்ட் ஸ்மைல்" என்ற அமைப்பை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,ஏற்படுத்தியுள்ளார் அர்ஜுன் கவுடா. அந்த அமைப்பின் கீழ் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களின் இறுதிச் சடங்கிற்கும் இவர் உதவி வருகிறார். இதுபற்றி தகவல் தெரிந்ததும், போட்டோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன் கவுடா, "கடந்த சில நாட்களாக இந்த பணியில் இருக்கிறேன். இன்னும் 2 மாதத்துக்கு, நிலைமை சீராகும் வரையில் இதைத் தொடர இருக்கிறேன். இதுவரை 6 பேருக்கு இறுதிச் சடங்குகளில் உதவி இருக்கிறேன். தேவைப்படுவோருக்கு ஆக்ஸிஜன் வழங்கவும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் மக்களுக்கு உதவிடும் வகையில் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.