அடுத்த அவதாரம் ரெடி! ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்த பிறகு, கங்கணா ரணாவத் உள்ளே வந்த புது கம்பீரம்!
பாலிவுட் நடிகை கங்கணா ராவத், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். 'தலைவி' படம், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில், அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே திரையரங்குகளில் "தலைவி" படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா பரவலால் படத்தின் வெளியீட்டைத், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதற்கிடைப்பட்ட நேரத்தில், தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் "டிக்கு வெட்ஸ் ஷெரு" என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார் கங்கணா ராவத். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் மணிகர்னிகா பிலிம்ஸ் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது. இது நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையாக இருக்கும். டிஜிட்டல் தளத்தில் இன்னும் அதிகமான சிறப்பான மற்றும் தரப்பான படைப்புகளை வழங்கவுள்ளதாக கங்கணா ராவத் தெரிவித்துள்ளார். மேலும் புதிய கதைகளையும், புதிய கலைஞர்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.