"மீண்டு வாழ வருகிறேன்" - கொரோனோவில் இருந்து மீண்ட இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்!

Update: 2021-05-15 12:00 GMT

"மீண்டு வாழ வருகிறேன்" என கொரோனோவில் இருந்து குணமான இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்.

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன், தற்போது மாஸ்டர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் நண்பர்களுடன் சேர்ந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தானும் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி கொரானா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக்க கடினமான காலக்கட்டம் மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய்த் தீவிரம் அடைந்தது. இடையறாது நாலாபக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால் நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால் செவிலியர்களின் கூர்மையான அக்கறையால் மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாக கடந்தேன். இலக்கியமும் வாசிப்பும் மனசோர்வின்றி எனை இலவம்பஞ்சைப் போல மிதக்க வைத்தது இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன்.


அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் என் குருநாதர்களும் சக இயக்குநர்களும் திரையுலக நண்பர்களும் முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன். அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம் மீண்டு(ம்) வாழ வருகிறேன்!" என உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.

Similar News