இயக்குனர் ஷங்கர் இயக்கி ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படத்திற்கு கதாநாயகியாக பாலிவுட் நட்சத்திரம் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் நம் தமிழ் சினிமாவின் ஷங்கர் தான். இந்திய திரையுலகை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றவர் இவர் என்றால் மிகையாகாது. தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் உலக சினிமா அறியும். இவர் படத்தில் தன் வாழ்நாளில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா என இந்தியாவின் கதாநாயகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்கி வரும் 'இந்தியன் 2' சில பிரச்சினைகளால் நிற்கும் சமயத்தில் இவர் அடுத்த படமாக கதாநாயகன் ராம்சரணை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு கதாநாயகி யார் என்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.
இந்த நிலையில் இந்தி திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகி ஆலியா பட் தான் ராம்சரணுடன் இந்தியில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜோடி சேருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனோ ஊரடங்கு முடிந்த பிறகு பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கலாம் என தகவல்கள் வருகின்றன.