அஜித்க்கு பிடித்த "அய்யப்பனும் கோஷியும்" - இயக்குனர் மறைவால் நின்றுபோன படைப்பு!
அய்யப்பனும் கோஷியும் இயக்கிய இயக்குனர் சாச்சி தமிழில் அஜித்தை வைத்து இயக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிரித்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இந்தப்படத்தை கதாசிரியரும் இயக்குனருமான சாச்சி இயக்கியிருந்தார். அந்த படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் சாச்சி.
அவர் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவரது மனைவி சிஜி, சாச்சியின் நினைவுகளை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் சாச்சி இறங்கியிருந்தார் என்கிற தகவலை கூறியுள்ளார் சிஜி.
அய்யப்பனும் கோஷியும் படம் பார்த்துவிட்டு அஜித் சாச்சியை தொடர்பு கொண்டு படத்தை பற்றி மிகவும் புகழ்ந்தாராம், மேலும், "நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம், அதற்கான கதையை தயார் செய்யுங்கள்" என்று சாச்சியிடம் கேட்டுக்கொண்டாராம் அஜித்.
அதற்கு பின் சில நாட்களில், அஜித்தை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சந்திப்பு நிகழாமலேயே அவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என வருத்தத்துடன் கூறியுள்ளார் சாச்சியின் மனைவி சிஜி.