"வேகமாக வளரும் ஓ.டி.டி தான் இனி சினிமாவின் எதிர்காலம்" - கணிக்கும் மணிரத்னம்!
"வேகமாக வளரும் ஓ.டி.டி தான் இனி சினிமாவின் எதிர்காலம்" என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.
கொரோனாவால் வாழ்வதாரம் இழந்தவர்களுக்கு உதவுவதற்காக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன், மணி ரத்னம், ஜெயேந்திரா இருவரும் சேர்ந்து நவரசா என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து மணிரத்னம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 30 ஆண்டுகளுக்கு மேல் நான் சினிமாவில் நீடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். பலர் இவ்வாறு இருந்திருக்கிறார்கள். குரசோவா கடைசி நாட்கள் வரை படம் இயக்கினார். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இன்று வரை சிறந்த படங்களை இயக்கி வருகிறார்.
பொன்னியின் செல்வனுக்கு இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. விரைவில் முடிப்போம் என்று நம்புகிறேன். எனது முந்தைய படங்களை விட பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமானது. பெரிய படமோ, சிறிய படமோ, இரண்டுமே கடினம் தான்.
நவரசா ஓ.டி.டி வெளியீடு பற்றி கேட்கிறார்கள். ஓ.டி.டி தான் சினிமாவின் எதிர்காலம். அது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளம். இரண்டு மணி நேரத் திரைப்பட வடிவத்துக்குப் பொருந்தாத பல சிந்தனைகள் உள்ளன. நீண்ட நேரம் ஓடக்கூடிய வெப் தொடர்களையோ அல்லது ஆந்தாலஜி படங்களையோ எடுக்கலாம். பெரிது, சிறிது என எல்லாவகையான கதைகளையும் சொல்ல ஓடிடி வழி வகுத்துள்ளது" என்றார் இயக்குனர் மணிரத்னம்.