"படத்தின் வெற்றியை கதாநாயகன் கொண்டாட வேண்டும், படப்பிடிப்பில் எப்படி இருந்தோமோ அதேபோல் படம் வெற்றியடையும் போதும் இருக்க வேண்டும்" என நடிகர் சிம்புவிற்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை கூறியுள்ளார்.
மாநாடு படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர், கதாநாயகன் சிம்பு'வை தவிர. இதனை குறிப்பிட்டு நடிகர் சிம்பு'விற்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது அறிவுரை கூறினார்.
அவர் பேசும்போது கூறியதாவது, "சிம்புவை நம்பி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிறைய முதலீடு செய்தது வீண்போகவில்லை அது வெற்றியை தந்திருக்கிறது. அதேபோல் நடிகர் சிம்புவிற்கு இப்படம் கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும். இருப்பினும் இப்படத்தின் வெற்றி விழாவில் சிம்பு கலந்துகொள்ளாதது வருத்தமே, கண்டிப்பாக இந்த விழாவில் அவர் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஏதோ படப்பிடிப்பில் இருப்பதாக சொன்னார்கள். ஒரு நடிகன் படப்பிடிப்பில் இருப்பதை போன்று வெற்றி விழாவில் தவறாமல் பங்குபெற வேண்டும். இந்ந சந்தோஷமான நிகழ்வை சிம்பு கொண்டாடியிருக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.