பணம், பொருள், பேர் இருக்கு!ஆனால் நிம்மதி மட்டும் இல்லை - வருத்தத்தில் ரஜினி!
சென்னையில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினகாந்த் பேசும்போது, பணம், பேர், புகழ் என்று வாழ்வில் அனைத்திலும் உச்சத்தை அடைந்துவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதியே இல்லை என்று புலம்பியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் யோகா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலினை வெளியிட்டு பேசியதாவது: யோகா நிகழ்ச்சிக்கு இத்தனை பெரிய கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும், என்னை பெரிய நடிகர் என்று பலர் இங்கு சொன்னார்கள். ஆனால் இது பாராட்டும் செயலா அல்லது திட்டும் செயலா எனக்கு தெரியவில்லை.
நான் இதுவரையில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா உள்ளிட்ட படங்கள் மட்டுமே. இப்படங்கள் வந்த பின்னர் அது தொடர்பாக மக்கள் நிறைய தெரிந்து கொண்டனர். ஏராளமானோர்கள் இமயமலைக்கு சென்று வந்தார்கள். அதன்படி சில ரசிகர்கள் சன்னியாசியாகவே மாறியுள்ளனர். ஆனால் இன்று வரையில் நான் நடிகராகவே உள்ளேன்.
இமயமலை என்பது இயற்கையாகவே அமைந்துள்ள சொர்க்கம் ஆகும். அங்குள்ள சில மூலிகைகளை சாப்பிட்டாலே ஒரு வாரத்திலேயே புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாகவே இல்லாமல் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar