'என்ன நடந்தாலும் நான் பார்த்துகிறேன்' - கமலாலயத்தில் கர்ஜித்த அண்ணாமலை!
'எது நடந்தாலும் சரி நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கூறியது தமிழக பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
தற்பொழுது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக வளரும் கட்சி! வளர்ந்த கட்சி! என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக இதற்கு முன்னால் எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைவர்களாக இருக்கும் பொழுது பாஜக கட்சி வளர்ந்து கொண்டிருந்தது. கட்சியில் புதிதாக ஆட்கள் வருவார்கள் மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் வந்து இணைந்தார்கள். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது, இந்த பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டதுமே தமிழக அரசியல் களம் சற்று ஆச்சரியத்துடன் பாஜகவை பார்த்தது, ஏனென்றால் குறிப்பாக 36 வயதான இளைஞர் ஒருவரை ஒரு தேசிய கட்சி மாநில தலைவராக அமர்த்துகிறது.
மேலும் அவருக்கு அரசியல் அனுபவம் ஏதும் கிடையாது, ஒன்பது ஆண்டுகள் ஐபிஎஸ் பதவியில் இருந்து விட்டு மட்டும் வந்திருக்கிறார். இவரை வைத்து எப்படி ஒரு தேசிய கட்சி மாநிலத்தில் வளரப்போகிறது என்று அனைத்து கட்சிகளும் பார்த்தனர்! ஆனால் சில அரசியல் பார்வையாளர்கள், வருங்காலத்தையும் கணிக்க கூடிய ஒரு சில அரசியல் விமர்சகர்கள் 'அண்ணாமலை சாதாரண ஆள் கிடையாது, அவரின் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் கண்டிப்பாக அண்ணாமலை காலத்தில் தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும்' என அப்பொழுதே கூறினார்கள். மேலும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை அண்ணாமலை ஏற்றதிலிருந்து கட்சி எந்த அளவிற்கு வளர்ந்ததோ அந்த அளவிற்கு கட்சியை சுற்றி சர்ச்சைகளும் வளர்ந்தன.
குறிப்பாக கட்சியின் மேல் அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிலிருந்து சிலர் கூறியதும் விமர்சித்தும், அவதூறு கூறியதும், கட்சியில் நடப்பது சரியில்லை, எங்களுக்கு மரியாதை இல்லை என்பது கருத்துக்களை முன் வைத்ததும், இதனை வைத்து ஊடகங்கள் விவாத நிகழ்ச்சிகள் நடத்தி பாஜக அழியும் நிலையில் உள்ளதா? தமிழக பாஜக ஏன் இப்படி செல்கிறது? அண்ணாமலை வந்ததற்கு பிறகு தான் இவ்வளவும்! என்கின்ற ரீதியில் அதிகபட்ச விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, கட்சி இன்று குறிப்பாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கணிசமான அளவிற்கு நிர்வாகிகளை மட்டுமல்லாத தொண்டர்களையும் ஈர்த்துள்ளது. இவை அனைத்தும் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து வேகமாக நடந்துள்ளது.