ஜெய்பீம் படத்திற்காக சூர்யா, ஜோதிகா மீது 5 நாளில் வழக்கு - போலீசுக்கு கெடுவிதித்த நீதிமன்றம்!
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை குறிக்கும் அக்னி குண்டம் பொருத்திய காலண்டரை ரவுடி போலீஸ் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஜெய்பீம் படம் வெளியானது. அதில் குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வன்னியர் சங்கத்தலைவர் குருவை விமர்சனம் செய்கின்ற வகையில் போலீஸ்க்கு அவரது பெயர் வைக்கப்பட்டு அழைத்தனர். அது மட்டுமின்றி வன்னியர்களை குறிக்கும் அக்னி கலசம் பொருத்திய காலண்டரும் வைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு பா.ம.க. கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இது குறித்து ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா, மற்றும் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது 5 நாட்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த படத்தின் சர்ச்சை மீண்டும் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar