"எந்தன் மூச்சும், இந்த பாட்டும் அணையா விளக்கே!" - பாடும் நிலா எஸ்.பி.பி'யின் 75-வது பிறந்தநாள்..!
"எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே" என தன் குரலால் இசை ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்த 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று 75'வது பிறந்தநாள்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5'ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்டம்பர் 25'ம் தேதி மறைந்தார். கோடிக்கணக்கான இசை ரசிகர்களை துயரில் ஆழ்த்திய சம்பவம் அது.
தமிழர்கள் மட்டுமின்றி தென்னிந்தியர்கள் அனைவரின் இசை ரசனையிலும் எஸ்.பி.பி கலந்திருப்பார். தன் முதல் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் சாந்தி நிலையம் படத்திற்காக பாடினார், "இயற்கை எனும் இளைய கன்னி" என்ற அந்த பாடல்தான் எஸ்.பி.பி அவர்களின் முதல் பாடல் இருப்பினும் முதலில் வெளிவந்தது எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில பாடிய "ஓராயிரம் நிலவே வா" என்ற பாடல்தான்.
அப்பொழுது துவங்கிய இசைப்பயணம் பின்னர் ஒரு சகாப்தம் படைத்து. தமிழ் சினிமா'வின் இருபெரும் சிகரங்களான ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களும் எஸ்.பி.பி'யின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. அதிலும் ரஜினியின் படத்தில் முதல் பாடல் கண்டிப்பாக எஸ்.பி.பி பாடிய பாடலாகதான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிப்போனது. அடுத்ததாக வரவிருக்கும் 'அண்ணாத்த' படத்திலும் கூட முதல் பாடல் பாடியுள்ளார் எஸ்.பி.பி இதுவே ரஜினி எனும் மாபெரும் உச்ச நட்சத்திரத்திற்கு இவர் பாடிய கடைசி பாடலாகும்.
எம்.ஜி.ஆர் துவங்கி இன்றைய அஜித், விஜய் காலம் வரை இவரின் குரல் திரையுலகில் தவிர்க்க முடியாமல் வலம் வந்தது என்றால் புரிந்துகொள்ள வேண்டும் இவரின் உழைப்பின் ஈடுபாட்டை.
பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் 6 முறை தேசிய விருதுகள், இது மட்டுமின்றி பல ப்லிம்பேர், தனியார் விருதுகள் அனைத்தும் இவர் வசம். ஏறத்தாழ 40000 பாடல்கள் இவரின் குரல்வளத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
"எந்தன் மூச்சும், இந்த பாட்டும் அணையா விளக்கே" என்று இவர் பாடியது போல் இசை ரசிகர்களின் ரசனையில் என்றும் இவர் வாழ்ந்துகொண்டு இருப்பார்.