நடிகர் ரஜினி தொடங்கப்போகும் கட்சிக்காக பாஜகவில் உயர் பொறுப்பில் இருந்து விலகி ரஜினியுடன் அர்ஜூனமூர்த்தி இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே அர்ஜூனமூர்த்திக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கினார் ரஜினி. ஆனால் சில வாரங்களில் புதிய கட்சியை தொடங்கப்போவதில்லை என்று ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் வேறு கட்சிக்கு செல்லாமல் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அர்ஜூனமூர்த்தி முடிவு செய்தார். அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டில் 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்று தனிக்கட்சியை தொடங்கினார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, 'இது வேற லெவல் அரசியல், மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அரசியல் என குறிப்பிட்டார்.
மேலும், தனது கட்சியில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் இணையலாம் என கூறினார்.
இந்நிலையில், புதிய கட்சி தொடங்கியுள்ள அர்ஜூனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ''இன்று தனி அரசியல் கட்சித் துவங்கியிருக்கும் திரு.அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்'' என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அர்ஜூனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். ''உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.