29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "பிரம்மாண்ட பிரம்மா இயக்குனர் ஷங்கர்'"
இயக்குனர் ஷங்கரின் 28 ஆண்டுகள் தமிழ் சினிமா
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.
இயக்குனர் ஷங்கர், இந்த பெயரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கைதட்டுவர். அந்தளவிற்கு தமிழ் திரையுலகில் திரையில் பெயர் தோன்றும்போது கைதட்டல் வாங்கிய ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். தன் வருமானத்தில் சொற்ப தொகையை கட்டணமாக செலவு செய்து இரண்டரை மணி நேரம் இருட்டில் அமர்ந்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்திபடுத்த வேண்டும் என்பதே இயக்குனர்களின் பிரதான எண்ணமாக இருக்கும் ஆனால் அதில் ஒருபடி முன் சென்று ரசிகனை சாதாரண அளவில் திருப்தியடைய செய்வது மட்டுமின்றி காட்சிக்கு காட்சி பிரமிப்பை ஏற்படுத்தி இவ்வாறெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தித்ததை திரையில் கொண்டு வர இயலுமா? அதற்கான உழைப்பு சாத்தியமா என ரசிகர் மனதில் பல கேள்விகள் எழ செய்து மீண்டும் திரையரங்கிற்கு இழுக்கும் வசியக்காரன் இந்த ஷங்கர்.
தனது படைப்புகளில் கற்பனை, வியாபாரம் என்பதையும் தாண்டி சமூக சிந்தனை இல்லாமல் இவர் படைப்புகள் இருக்காது. கல்வி'க்கு ஏன் பணம்?, நடுத்தர வர்க்கம் கனவு காண்பது மட்டுமல்ல சாதிக்கவும் முடியும் என்ற எண்ணம், அரசு அதிகாரிகள் நினைத்தால் இந்தியா உயரும், அரசியல்வாதிகள் மாறினால் என்ன அதிசயம் நிகழும், கருப்பு பணம் ஒழிந்தால் என்ன ஆகும்? என்பது போன்ற இன்றைய சமுதாய தேவைகளை திரையில் சாதுர்யமாக நகர்த்தி காண்பித்திருப்பார் இந்த கும்பகோணத்துக்காரர்.
தன் முதல் படைப்பான 'ஜென்டில் மேன்'ல் கல்வி வியாபாரம் அல்ல என காட்டியது மட்டுமின்றி காசு செலவு செய்து படிப்பதால் திறமையானவர்கள் உருவாக இடம் கிடைப்பதில்லை என்ற அழுத்தமான கருத்தை கன கச்சிதமாக பதித்திருப்பார். ஆசைபட்ட படிப்பை படிக்க இயலாமல் கையில் அப்பள பையை தூக்கி வியாபாரத்திற்கு செல்லும் மாணவனின் அழுத்தமான மனநிலையை இன்றைய பல மாணவர்கள் அனுபவிக்கின்றனர்.
பின் அடுத்த படைப்பான 'காதலன்' சாதாரண இடைநிலை குடும்ப பையன் தன் காதலுக்காக எந்த ஒரு உயரத்தையும் எடுக்கும் முயற்சிகளை தனக்கே உரிய பிரம்மாண்டத்துடன் படைத்திருப்பார். பின்னர் ஷங்கர் எடுத்த அவதாரம்'தான் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை! 'லஞ்சத்திற்கு எதிரான ஓர் மூத்த குடிமகனின் போராட்டத்தை 'இந்தியனாக' படைத்திருப்பார். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை புரையோடிப்போன லஞ்சத்தை அதன் பின்னணியிலான அரசு அலுவலகங்களை அப்பட்டமாக காட்சிபடுத்தியிருப்பார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த படத்தில் வரும் லஞ்சம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஏதேனும் ஒன்றை தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் இருக்க முடியாது.