சென்னையில் தொடங்கிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. டி.ராஜேந்தர், முரளி அணிக்கு இடையே கடும் போட்டி.!
சென்னையில் தொடங்கிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. டி.ராஜேந்தர், முரளி அணிக்கு இடையே கடும் போட்டி.!;
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணி மற்றும் முரளி அணி போட்டியிடுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள், சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து சென்று மற்றொரு அணியை உருவாக்கினர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்,கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகிறார்கள். மாலை 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை (நவம்பர் 23ம் தேதி) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் சினிமா வட்டாரத்தில் இன்று பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.