பிரதமர் வலியுறுத்தும்  'ஒரே தேசம், ஒரே தேர்தல்' சாதக பாதகங்கள் - ஒரு அலசல்.!

பிரதமர் வலியுறுத்தும்  'ஒரே தேசம், ஒரே தேர்தல்' சாதக பாதகங்கள் - ஒரு அலசல்.!

Update: 2020-11-28 09:35 GMT

பாஜகவின் முந்தைய ஆட்சிக் காலத்திலிருந்து அக்கட்சியின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது 'ஒரே தேசம், ஒரே தேர்தல்'. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, அனைத்து மாநிலங்களில் சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை முன்னிறுத்தி வருகிறது. 

இத்திட்டத்துக்கு பிராந்திய கட்சிகள் மற்றும் சில மாநில கட்சிகள், கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் ஒரே சமயத்தில் ஒரே தேர்தல் ஒன்றும் புதிய நடைமுறை இல்லை என்றும், இந்தியாவில் 1967ஆம் ஆண்டுவரையில் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன என்றும், இந்நிலையில் 1967, 1968ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதாலும் 1970ல் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும் தேர்தல்கள் மாநிலங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாறிமாறி நடைபெற ஆரம்பித்தன என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.
சென்ற 2019 மக்களவை தேர்தலில் கூட ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒன்றாகவே நடைபெற்றது. 

இந்த நிலையில் சென்ற 2019 மக்களவை தேர்தலை மட்டும் நடத்தி முடிக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

 இத்தோடு எல்லா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் இன்னொரு 60 ஆயிரம் கோடி மிச்சம் என்றும், பணம் மிச்சமாவதுடன், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தலைவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பது நரேந்திர மோடி அரசின் வாதமாக உள்ளது. 

மேலும் இரண்டு மடங்குக்கும் அதிகமாக செலவாகும் இந்த பணத்தை தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாமே என்பதும் பிரதமர்மோடி அவர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் ஒரே சமயத்தில் எல்லா தேர்தல்களையும் நடத்துவது புதிய விஷயம் ஓன்றும் இல்லை, 

ஏற்கனவே இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அடுத்த 20 ஆண்டுகளாக இது கடைபிடிக்கப்பட்டதாக நரேந்திர மோடி அரசு கூறிவருகிறது. 

இந்த நிலையில் ஏற்கனவே சென்ற 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமே நரேந்திரமோடி தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் அப்போது புறக்கணித்ததாக செய்திகள் வந்தன.

இந்தியா, மாநிலங்களின் கூட்டரசு நாடென்றும், ஒரே சமயத்தில் மத்திய அரசே எல்லா தேர்த;ல்களையும் நடத்துவது ஏதேச்சதிகார போக்கு என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதற்கான தகுந்த வசதிகள், பொருளாதாரச் சூழல்கள், ஆட்சி மாற்றங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து  எதிர்கட்சிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில் சட்ட மன்ற சபாநாயகர் களின், 80ம் ஆண்டு மாநாடு நிறைவு விழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் , "ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல இப்போதைக்கான தேவை மற்றும் தேசத்தின் விருப்பமும் இதுவே என்றார். 

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது, நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்குத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்ய முடியும்." என கறாராக கூறினார். பிரதமரின் இந்த திட்டவட்டமான பேச்சு அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் பிரதமர் மோடி அவர்களின் இந்த ஒரே நாடு.. ஒரே தேர்தல் வருவது நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் தேசீயத்தின் மீது மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தும், பிராந்திய வாதம், பிரிவினை வாதம் அடிபட்டுப் போகும்தேசீய உணர்வு மேலோங்கி நாடு சமச்சீரான அளவில் வளர்ச்சி அடையும், அரசின் பணமும், அதிகாரிகளின் நேரமும் மிச்சமாகும் என பொதுநல வாதிகள் கூறுகின்றனர். 

அதே சமயம் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் பழைய வாக்குச்சீட்டு முறையிலே நடை பெறுகிறது. இது பல இடங்களில் கள்ள வாக்குக்கு வழி வகுக்கிறது. பிரதமர் மோடி வலியுறுத்தும் ஒரே தேசம்- ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் தில்லு முல்லுகள் இல்லாத வாக்குப் பதிவு இயந்திர முறை கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Similar News