காங்கிரஸ் இழைத்த அநீதி.. நீதியைப் பெற்றுக் கொடுத்த மோடி அரசு.. எதில் தெரியுமா?
குடியுரிமை திருத்தச் சட்டம்:
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் 188 அகதி சகோதர-சகோதரிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்கள் நேற்று வழங்கினார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் அமித் ஷா தமது உரையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் குடியேறியுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான அகதிகளுக்கு நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதாகும். முந்தைய அரசுகளின் திருப்திப்படுத்தும் கொள்கையின் காரணமாக, 1947 முதல் 2014 வரை நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை என்றார். இந்த மக்கள் அண்டை நாடுகளில் மட்டுமல்ல, இங்கேயும் துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். இந்த லட்சக்கணக்கான மக்கள் மூன்று தலைமுறைகளாக நீதிக்காக ஏங்கினர், ஆனால் எதிர்க்கட்சிகளின் திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக, அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று திரு ஷா கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.
மக்களுக்காகத்தான் சட்டம் , சட்டத்திற்காக மக்கள் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் 2014-ல் உறுதியளித்தோம், 2019-ல் மோடி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். இந்த சட்டத்தின் மூலம், நீதி கிடைக்காத கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் நீதி பெறத் தொடங்கினர் என்று அவர் கூறினார். இந்த சட்டம் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் இது முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க இந்தச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் என்றும் மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தினார். நமது சொந்த நாட்டு மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே ஆதரவற்ற நிலையில் வாழ்கிறார்கள். இதை விட துரதிர்ஷ்டவசமானதும் முரண்பாடானதும் என்ன இருக்க முடியும்? திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக பல ஆண்டுகளாக செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்து 2019-ல் இந்த சட்டத்தை கொண்டு வந்தார் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், நாட்டில் சிறுபான்மையினர் தூண்டப்பட்டதால் கலவரங்கள் ஏற்பட்டு,இந்தக் குடும்பங்களுக்கு 2024 வரை குடியுரிமை கிடைக்கவில்லை என்று திரு அமித் ஷா கூறினார். சிஏஏ குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை, இது இந்து, சமண, சீக்கிய, பௌத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இன்றும் சில மாநில அரசுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று திரு அமித் ஷா கூறினார். நாடு முழுவதும் உள்ள அகதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம் என்றும், இது அவர்களின் வேலைகள், வீடுகள் போன்றவற்றை முன்பு போலவே வைத்திருக்கும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.