தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா நடத்த வேண்டும் - கலெக்டரிடம் மனு!

Update: 2021-04-17 01:00 GMT

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை நோய் தோற்று கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக கொடியேற்றம் கடந்த வாரம் நடைபெற்றது. இதனால் சிவபக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்கள், அருங்காட்சியங்கள் மற்றும் நினைவிடங்களை மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு தொல்லியல்துறை ஆணை வெளியிட்டதை தொடர்ந்து பெரிய கோவில் மூடப்பட்டது. இதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சித்திரை திருவிழா தடைபட்டுள்ளது.

இதனால் இந்து முன்னணி பேரியக்கத்தின் உறுப்பினர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுடன் சித்திரை திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் அதிகமாக கூடும் பல்வேறு வணிக வளாகங்கள் இன்னும் திறந்து இருக்கும் நிலையில் பெரும்பான்மையான இந்துக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சித்திரை திருவிழாவிற்கு தடை விதிப்பது இந்துக்களின் மனத்தை புண்படுத்தும் செயலாக உள்ளது. மேலும் சித்திரை திருவிழா நடைபெறாவிட்டால் நோய் தொற்று மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இந்த ஆண்டு சித்திரை திருவிழா சமூக இடைவெளி மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News