இருசக்கர வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்!
இருசக்கர வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்றும் பள்ளி பாடங்களில் சாலை விழிப்புணர்வு தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது
இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு எந்த அளவு அதிகரித்து உள்ளதோ அதே அளவு சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது அனைவராலும் மறுக்கப்படாத உண்மையாக இருந்து வருகிறது. கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை வற்புறுத்தி விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை வாங்கி அதனை சாலைகளில் அதிவேகமாக ஓட்டிச் செல்வதை பெருமையாக நினைத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அதிவேகமாக செல்லும் இது போன்ற இளைஞர்களினால் அப்பாவி பொதுமக்கள் கூட பலியாகும் சம்பவமும் இதனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஆதரவின்றி தவிப்பதையும் நாம் செய்திகளில் படித்துள்ளோம். இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த மற்றும் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களில் அவசியம் வேகக்கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாலை விழிப்புணர்வு தொடர்பான பாடங்களை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைகளில் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற விதியையும் திரும்பப் பெறுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.