கொரோனா நோயாளிகளுக்கு ஆயிரக்கணக்கான படுக்கைகள் காலியாக உள்ளது - சுகாதாரத்துறை செயலர்!

Update: 2021-04-24 07:37 GMT

தமிழகத்தில் ஆக்சிஜனுடன் கூடிய ஆயிரக்கணக்கான படுக்கைகள் காலியாக உள்ளது என்றும், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை என்றும் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்




சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை 95,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மக்கள் தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம் என்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி அவரின் அறிவுரைப்படி மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நிலையை சமாளிக்க கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கூடுதலாக 2400 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்று அவர் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து வெளியில் சென்று வர வேண்டும் என்றும் அரசு பின்பற்ற கூறும் நெறிமுறைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Similar News