வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பல காலமாக வழிபட்டு வரும் கோவிலை சீரமைக்க அரசு அதிகாரி தடையாக இருப்பதாகக் கூறி இந்து முன்னணி அமைப்பினரும் கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். குடியாத்தம் அருகே தட்டப்பாறை மற்றும் சின்னலபல்லி என்று இரு கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மக்கள் இரு கிராமங்ளுக்கும் பொதுவான பெரியாண்டவர் கோவிலில் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. பழமையின் காரணமாக கோவில் சிதிலமடைந்து வரும் நிலையில் கிராம மக்கள் அதை சீரமைத்து புதிதாக எடுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால் இதற்கு வருவாய்த் துறை அதிகாரி மன்சூர் தடையாக இருப்பதாகவும் வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டி சீரமைப்புப் பணியைத் தடுப்பதாகவும் கிராம மக்களும் இந்து அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்த போதும் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
அதேபோன்று பொதுமக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு பொது கிணற்றை மூடி அங்கு சுவர் எழுப்பி ஆக்ரமித்தவர்கள் மீது அளித்த புகாரின் பேரிலும் வருவாய் துறையினரும் காவல் துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த இரு பிரச்சினைகளிலும் நடவடிக்கை எடுக்கக்கோரி தட்டப்பாறை மற்றும் சின்னலபல்லி கிராம மக்களும் இந்து முன்னணி அமைப்பினரும் குடியாத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.