கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி - மத்திய அரசு தாராளம்!
கொரோனா நோய்தொற்று காலத்தில் மாநில அரசுகள் அதனை சமாளிக்க உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநிலங்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுத்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு சார்பாக தமிழகத்திற்கு ₹ 773.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
இதேபோல் டெல்லி அரசுக்கு மத்திய அரசு ₹ 651 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் டெல்லி அரசு அதனை குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராட வேண்டியது அனைவரின் கடமை. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக போராடி வருகிறார் என்று பதிவிட்டிருந்தார். மேலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை அரசியல் லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்று சேர்ந்து கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.