கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ வசதியுடன் கூடிய ரயில் பெட்டி - ரயில்வே அமைச்சகம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக லேசான அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளை தங்க வைப்பதற்காக இந்திய ரயில்வே அந்தந்த மாநில அரசு பயன்படுத்திக்கொள்ள ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது.
இதன் முதற்கட்டமாக தொற்று அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்திற்கு ரயில் பெட்டிகளை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
"கொரோனா 2வது அலைக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருப்பதால், கொவிட் சிகிச்சைக்கான ரயில் பெட்டிகளில் கூடுதல் வசதிகள் செய்து பல மாநிலங்களுக்கு ரயில்வே அனுப்பி வருகிறது. இவற்றை லேசான அறிகுறியுள்ள கொவிட் நோயாளிகளுக்கு தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடியும். தற்போதைய கோடைக்காலத்தை சமாளிக்க இந்த ரயில் பெட்டிகளில் கூலர்கள், சணல் விரிப்புகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 4000 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் நாட்டின் பல ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில, கொவிட் முதல் அலையின்போது, ஏற்கனவே தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்பட்டன.
கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் கொரோனா சிகிச்சை ரயில் பெட்டிகளின் விவரம்:
தில்லியில் 800 படுக்கைகளுடன் 50 ரயில் பெட்டிகள் சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் உள்ளன. இவற்றில் தற்போது 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400 படுக்கைகளுடன் 25 ரயில் பெட்டிகள், ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் உள்ளன. மகாராஷ்டிராவின் நந்தர்பர் ரயில் நிலையத்தில் 378 படுக்கைகளுடன் 21 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 55 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.