ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் தொற்று குறித்த நிலையை ஆலோசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன
பிரதமர் நரேந்திர மோடியை இன்று தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியாவில் கொரொனாவின் தற்போதைய நிலையை பற்றி இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.அப்போது இந்தியாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு ரஷ்ய தயாராக உள்ளது என்று ரஷ்ய அதிபர் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கான ரஷ்யாவின் ஆதரவு இருநாடுகளின் உறவுக்கான அடையாளம் என்று தெரிவித்தார்.
மேலும் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த பெரும்தொற்றை எதிர்த்து போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டது அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்தியா ரஷ்யா மற்றும் உலக நாடுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷ்யா தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
மேலும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு ரஷியா அளித்த ஆதரவுக்கும், இந்தியாவைச் சேர்ந்த நான்கு ககன்யான் ஆராய்ச்சியாளர்களுக்கு ரஷியா பயிற்சி அளித்ததற்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
2021-ல் இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டுக்கு ரஷ்யா முழு ஆதரவை தருமென்று அதிபர் புடின் உறுதிப்படுத்தினார். இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர். இந்தியாவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது ரஷ்ய அதிபரும் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.