கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் புதுடில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது 240 படுக்கை வசதிகளுடன் இரண்டு வாரங்களுக்குள் தயார் செய்யப்பட்ட IPD வார்டை பார்வையிட்டார். பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் இடத்திற்கு சென்று அங்கு முறையாக தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறதா என்று பார்வையிட்டார்.
இதுபோன்ற சவாலான சூழ்நிலையில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை அமைச்சர் வெகுவாக பாராட்டினார். கடந்த ஒரு மாதத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ள போதிலும் அதில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் அதே வேகத்தில் அதிகரித்து வருகின்றது.
மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து குணமடைந்ததும் வருகின்றனர். உலகில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களில் இந்தியா ஒன்றாக உள்ளது. எனினும் ஒவ்வொரு மரணமும் துன்பகரமான மற்றும் வேதனையானது என்று டாக்டர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். (தற்போது தேசிய இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து 1.11% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது).
இதேபோல் நாட்டில் பரிசோதனைகளின் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், நேற்று மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராட்டினார். ஒட்டுமொத்தமாக, நேற்று வரை, நாடு முழுவதும் 28,44,71,979 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று 17,68,190 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை விரைவாக சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் பீதி அடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.