அகமதாபாத் விரைந்த இந்திய கப்பல்படை மருத்துவக் குழு- கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய கப்பல் படையை சேர்ந்த மருத்துவ குழு அகமதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா நோய் தொற்றிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இரவும் பகலுமாக இந்த கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தற்போது இந்திய கப்பல் படையை சேர்ந்த மருத்துவ குழு ஒன்று அகமதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த மருத்துவ குழுவில் மொத்தம் 57 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 4 மருத்துவர்கள், 7 செவிலியர்கள், 26 மருத்துவ பணியாளர்கள் 20 மருத்துவ உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அகமதாபாத்தில் உள்ள PM கேர்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்கு கப்பல் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவினர், கொரோனா நோய்தொற்று நெருக்கடியை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அகமதாபாத் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். இந்தக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்கு பணியாற்ற உள்ளனர். தேவைக்கேற்ப இந்தக் கால அளவு நீட்டிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.