ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்ற மருத்துவர் கைது - அதிகாரிகள் நடவடிக்கை!
ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கல் செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற சென்னையை சேர்ந்த மருத்துவர் முகமது இம்ரான் கான் என்பவரையும், அரசு மருத்துவமனை கம்பவுண்டரையும் குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் இந்த நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள் சிலர் இந்த மருந்தினை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர். உதாரணமாக 3500 ரூபாய் விலை கொண்ட ரெம்டெசிவிர் மருந்தை 20,000 முதல் 40,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இன்னிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் முகமத் இம்ரான் கான் என்ற மருத்துவர் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்பதாக குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு சிஐடி எஸ்பி சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அவ்வழியாக வந்த டாக்டர் இம்ரான் கானை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவிர் 17 சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.
இதனால் டாக்டர் முகமது இம்ரான் கானை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் என்ற கம்பவுண்டரிடமிருந்து இந்த மருந்தை 7000 ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அதனை கொரோனா நோயாளிகளுக்கு 20,000 ரூபாய் வரை விற்றததாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை விரைந்த அதிகாரிகள் கம்பவுண்டர் விக்னேஷை கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொது அரசியல்வாதிகள் கைது நடவடிக்கையின் போது நடப்பதை போன்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.