வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரங்கள் அனைத்து மாநிலத்திற்கும் விநியோகம் - மத்திய அரசு!
கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சம அளவில் தரப்பட்டு வருவதாக மத்திய அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரனோ இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், ஆக்சிஜன் செரிவூட்டிகள் என பல்வேறு மருத்துவ வசதிகளை செய்து வருகின்றனர். இந்த உதவிகள் அனைத்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் பெறப்பட்டு வருகிறது. கொரோனா தொடர்பான இறக்குமதிகள் 1 மணி நேரத்திற்குள் சரி செய்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக சுங்கத்துறை 24 மணி நேரமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா தொடர்பாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்க
வரி தள்ளுபடி செய்யப்படுவதுடன் ஜிஎஸ்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட உபயோகத்திற்கான இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தொடர்பான உபகரணங்கள் முதலில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மற்றும் மத்திய மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மே 2ஆம் தேதிக்கு பிறகு மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மருந்து பொருட்கள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 24 பிரிவுகளில் பெறப்பட்ட 40 லட்சம் பொருட்கள் நாட்டில் உள்ள 86 மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் N95 மாஸ்க்குகள், வெண்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்ஸிமீட்டர்கள் என முக்கிய கொரோனா உபகரணங்கள் அடங்கும்.இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் நாட்டில் 32 மாநிலங்களில் உள்ள முக்கியமான 38 மருத்துவமனைகள் உட்பட 86 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.