டெல்லி மற்றும் ஹரியானா எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தீவிரம் - மத்திய அரசு தகவல்!
கொரோனா பரவல் மற்றும் அடுத்தடுத்த ஆக்சிஜன் தேவையை சமாளிக்க PM கேர்ஸ் நிதி மூலம் நாடு முழுவதும் 500 மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த ஆலைகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்குள் நாடு முழுவதும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மூலம் டெல்லி மற்றும் அதைச் சுற்றி 5 இடங்களில் மே முதல் வாரத்திற்குள் ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இவை எய்ம்ஸ் விபத்து சிகிச்சைப் பிரிவு, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை (ஆர்.எம்.எல்), சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜார் மற்றும் எய்ம்ஸில் ஆரிய மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளன. இதற்கான உபகரணங்கள் அந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கால அட்டவணையின்படி இந்த ஆலைகளில் இரண்டு மே 4, 2021 அன்று டெல்லியில் எய்ம்ஸ் மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனைகளில் நிறுவப்படுகின்றன.
கோயம்புத்தூரை சேர்ந்த ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் டிஆர்டிஓவின் தொழில்நுட்ப பங்களிப்புடன் 48 ஆலைகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் 332 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளது. இந்த புதிதாக நிறுவப்பட்ட ஆலைகள் மூலம் மே மாத நடுப்பகுதியில் இருந்து விநியோகம் தொடங்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியவுடன் அந்தந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வழங்கும் திட்டம் உடனடியாக தொடங்கப்படும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 190 நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் 195 சிலிண்டர்கள் ஒரு நாளைக்கு தயார் செய்ய முடியும் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.