சிலைகள் தொலைந்து புதர் மண்டிக் கிடக்கும் கோவில் - அறநிலையத் துறை கவனிக்குமா?

Update: 2021-05-06 03:43 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோவில் புதர் மண்டி, இடியும் நிலையில் இருப்பதால் அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. எனினும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறது.

அமராவதி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இந்த வைணவ தலத்தில் உட்புறம் கருவறையைச் சுற்றி அகழி, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்று கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இரு தள விமானத்தைக் கொண்ட கோபுரத்தில் செடிகள் முளைத்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சுற்றுச் சுவரும் சேதமடைந்து புதர் மண்டிக் கிடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அதிர்ச்சியூட்டும் வகையில் சந்நிதிகளில் சிலைகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோவில் கவனிப்பாரற்று இருப்பதால் சிலர் சில காலம் முன்பு சிலைகளைக் திருடிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் சிலையின் எடை அதிகமாக இருந்ததால் அருகில் வயல்வெளியில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதனால் சிலைகள் இன்னும் மண்ணில் புதைந்த நிலையிலேயே இருக்கின்றன.

இது போதாதென்று கோவிலை ஆய்வு செய்ய வந்திருக்கிறோம் என்று கூறிய அதிகாரிகள் சிலர் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது முன்பக்க கதவை உடைத்துள்ளனர். இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் வவ்வால்களின் இருப்பிடமாகவும் மாறியுள்ளது இந்தக் கோவில். பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் உள்ள கலை மற்றும் வரலாற்று பொக்கிஷங்களை காக்க யாருக்குமே அக்கறை இல்லையா என்று அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Similar News